புனே

புனே ராணுவ தொழிற்சாலைகளில் 7000 பேருக்கு மேல் வேலை நிறுத்தம் செய்வதால் உற்பத்தி முழுவதுமாக முடங்கி உள்ளது.

நாடெங்கும் பல இடங்களில் பாதுகாப்புத் துறையின்  தளவாட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இவ்வாறு இயங்கி வரும் 41 தொழிற்சாலைகளில் சுமார் 82000 பேர் பணி புரிந்து வருகின்றனர். சமீபத்தில் மத்திய அரசு இந்த தொழிற்சாலைகளைத் தனியார் மயமாக்குவது குறித்து ஆலோசனை செய்து வருவதாகத் தெரிவித்தது. இது ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் புனேவில் மூன்று முக்கிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

அந்த மூன்று தொழிற்சாலை ஊழியர் தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தம் குறித்துக் கடந்த மாதம் வாக்கெடுப்பு நடத்தின. அதில் 75%க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், “ராணுவ தொழிற்சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டால் 82000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்கால வாழ்க்கை நாசமாகும். இவர்களில் 44000 பேர் கடந்த 2004 ஜனவரிக்குப் பிறகு பணி அமர்த்தப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.

இவர்கள் ஏராளமான எதிர்பார்ப்புகள் மற்றும் ஆர்வத்துடன் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள் உத்தரவாதமற்ற தேசிய ஓய்வூதிய திடத்தின் கீழ் வருவதால் ஏற்கனவே ஓய்வூதிய உரிமையை இழந்துள்ளனர். தற்போதைய வருமானத்தை நம்பி மட்டுமே இவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவை அனைத்தும் இவர்கள் மீது எந்த தவறும் இல்லாத நிலையில் தனியார் மயமாக்கல் நடவடிக்கையால் அழியும். அவர்களில் பலர் திறமையான தொழிலாளர்கள் மற்றுமதிகார்கள் ஆவார்கள். இனி அவர்கள் எதிர்காலம் ஒரு நிலையற்ற தன்மையை அடையும். எனவே ராணுவ தொழிற்சாலைகளைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் இன்று காலை 7 மணி முதல் புனே தொழிற்சாலையில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் தீயணைப்பு, அவசர மருத்துவ ஊழியர் மற்றும் அத்தியாவசிய ஊழியர்கள் தவிர மற்ற 7000க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த தொழிற்சாலைகளின் உற்பத்தி முழுவதுமாக முடங்கியது.