டில்லி:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்துள்ள தற்கு அரியானா மாநில முன்னாள் முதல்வரும்,  காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர்சிங் ஹூடா வரவேற்பு தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசால், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரபரப்பு நிலவி வருகிறது. சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு, அரசியல் கட்சித் தலை வர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்தியஅரசின் முடிவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் மோடி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே,  காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஜனார்த்தன் திரிவேதி, தீபிந்தர் ஹூடா, அதீதி சிங்,  ஜோதிராத்யா சிந்தியா போன்றோர் வரவேற்றுள்ள நிலையில், தற்போது  அரியானா முன்னாள் முதல்வர்  பூபிந்தர்சிங் ஹூடாவும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹூடா,”சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற குடும்பத்தில் பிறந்தவன் நான். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததற்கு காங்கிரசை சேர்ந்த பல சகாக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அரசு ஏதாவது நல்லது செய்தால் அதை நான் ஆதரிப்பவன். காஷ்மீரில் நமது சகோதரர்கள் ராணுவ வீரர்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனவே காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவை ஆதரிக்கிறேன் என்று கூறி உள்ளார்.

மேலும்,  370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்ப்பவர்களுக்கு ஒன்று கூற விரும்பு கிறேன். நமது பாரம்பரியத்துக்கும், கொள்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர்த்து போராட வேண்டும். காங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையுடன் செயல்படவில்லை. அது தனது தனித்தன்மையை இழந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  பூபிந்தர் சிங் ஹூடாவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில், அவரது ஆதரவாளர்கள் சிலர், அவரை காங்கிரஸ் கட்சியின் தற்போதய தலைவரான அசோக் தன்வாரை மாற்றி விட்டு, ஹூடாவை   மாநில தலைவராக்க அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]