விஜயவாடா

ந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ள பல நலத் திட்டங்களுக்கு போதிய நிதி நிலை இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததும் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல நலத்திட்டங்களை அறிவித்தார்.  அவரது கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அத்தனை நலத் திட்டங்களும், அறிவிக்கப்பட்டுள்ளன.   இதில் முக்கியமானவை 75% வேலை வாய்ப்புக்கள் உள்ளூர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதும் மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களும் ஆகும்.

அரசு பதவி ஏற்கும் போது ரூ.45000 கோடி பற்றாக்குறையாக இருந்தது.   அரசு அறிவித்த பல நலத் திட்டங்கள் மூலம் அந்த பற்றாக்குறை மூன்றே மாதங்களில் ரூ.50000 கோடியை எட்டி உள்ளது.    தற்போதுள்ள நிலையில் மாநில தலைநகர் அமராவதி மேம்பாட்டு திட்டங்களுக்கு போதுமான நிதி நிலை இல்லாததால்  ஏற்கனவே ஒப்பந்தம் அளித்துள்ள நிலையில் தங்கள் பணத்தைச் செலவழித்து ஒப்பந்த தாரர்கள் வேலையை முடிக்க மறுத்துள்ளனர்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மத்திய அரசுக்குப் பல சர்ச்சைக்குரிய மசோதாக்களில் ஆதரவு அளித்துள்ளது.   ஆயினும் மத்திய அரசு ஆந்திர அரசுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கத் தயாரில்லாத நிலையில் உள்ளது.  இது மாநில அரசின் நிதி நிலை பிரச்சினையை மேலும் அதிகமாக்கும் என கூறப்படுகிறது.   ஜெகன்  மோகன் ரெட்டியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மிகுந்த நிதி உதவி தேவைப்படுவதால் மத்திய அரசு உதவவில்லை எனில் அது அவர் அரசுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு உள்ளது.

தற்போதைய ஆந்திர அரசு இந்த மோசமான நிதிநிலை வீழ்ச்சிக்குக் காரணம் முந்தை அரசு எனக் கூறுகிறது.   கடந்த 2014-15 ஆம் வருடம் மாநில அரசின் கடன் தொலை ரு.1,30,654 கோடியாக இருந்த நிலையில் 2018-19 ஆம் வருடம் அந்த கடன்கள் ரூ.2,58,928 கோடியாக உயர்ந்துள்ளது.   எனவே வெளிநாட்டு முதலீடுகள் பெறுவது குறித்து முதல்வர் சென்ற வாரம் விஜயவாடா நகரில் ஒரு நிகழ்வை நடத்தினார்.

சுமார் 30 நாடுகளில் இருந்து வந்த பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட அந்த நிகழ்வில் பல முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு அரசால் பதில் கூற இயலவில்லை.  இதையொட்டி  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது உரையில் ஆந்திரப் பிரதேச மாநிலம் மிகவும் ஏழ்மையான மாநிலம் எனவும் அங்கு ஐதராபாத், சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்கள் இல்லை எனவும் தெரிவித்தார்.  அத்துடன்  தனது அரசு ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தினால் முதலீட்டாளர்களுக்கு உதவும் என உறுதி அளித்தார்.

அவருடைய இந்த வெளிப்படையான உரை முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ளது எனச் சொல்லலாம்.  அவர்கள் உற்பத்தி, மருந்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், உணவு பதனிடுதல் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு அளிக்க முன் வந்துள்ளனர்.  அத்துடன் முதல்வர் மின் உற்பத்தியாளர்கள் அதிக விலைக்கு மின்சாரம் அளித்தால் அது நுகர்வோருக்குச் சுமையாக இருக்கும் எனச் சொன்னதைப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஆயினும் உள்ளூர் மக்களுக்கு 75% வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது பல முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.   இதனால் கொரியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் ஆந்திராவில் தொழில் தொடங்க இருந்த நிலையை மாற்றிக் கொண்டுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.   இதனால் நிதி பற்றாக்குறை காரணமாக ஜெகன் மோகன் ரெட்டி  அறிவித்த பல நலத்திட்டங்கள் தடுமாறி வருவதாகவும் அந்த ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.