பெய்ஜிங்: சீன குடிமக்களின் வருவாய் கடந்த 70 ஆண்டுகளில் 60 மடங்கு அதிகரித்துள்ளது என்று சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஏற்றத்தின் மூலம், சீனா, நடுநிலை வருவாய் உள்ள நாடு என்ற நிலையிலிருந்து, உயர் வருவாய் கொண்ட நாடாக விரைவில் மாறவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 1949ம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்டுகள் மாவோ தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றும்போது, அந்நாட்டின் தனிநபர் வருமானம் 49.7 யுவான்.
ஆனால், கடந்த 2018ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, தனிநபர் வருமானம் 28200 யுவான்கள் (4030 அமெரிக்க டாலர்கள்). கடந்த 1949ம் ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், மொத்தம் 59 மடங்கு வருமான உயர்வு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீன பொருளாதாரம் திகழ்கிறது. கடந்த 1953ம் ஆண்டு 88.2 யுவான்களாக இருந்த ஒரு சீனரின் நுகர்வு செலவினம், 2018ம் ஆண்டில் 19853 யுவான்களாக அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.