புதுடெல்லி: சில சாதாரண பொருட்களுக்கு மிதமிஞ்சிய கட்டணங்களை வசூலிக்கும் 5 நட்சத்திர ஹோட்டல்களிடம் அரசின் சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று கூறியுள்ளார் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்.
சமீபத்தில் கொண்டுவரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்படுகையில், இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில் தேவையான அம்சங்கள் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சண்டிகரிலுள்ள JW Marriott ஐந்து நட்சத்திர ஹோட்டலில், 2 வாழைப்பழத்திற்கு ரூ.442 வசூலிக்கப்பட்டதும், மற்றொரு 5 நட்சத்திர ஹோட்டலில் 2 வேகவைத்த முட்டைகளுக்கு ரூ.1700 வசூலிக்கப்பட்டதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுபோன்ற முறையற்ற வணிகத்தைக் கண்டித்த பாஸ்வான், வாழைப்பழமும் முட்டையும் வெளிச்சந்தையில் மிகவும் மலிவாக கிடைக்கையில், எப்படி அந்த ஹோட்டல்களால் இவ்வளவு கட்டணம் வசூலிக்க முடிகிறது என்று கேள்வி எழுப்பிய அவர், இது கட்டாயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய துரதிருஷ்டவசமான விஷயம் என்றார்.