புதுடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததா? இல்லையா? என்பது குறித்த வாதம் உச்சநீதிமன்ற விசாரணையில் முன்வைக்கப்பட்டது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் தற்போது சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் இருந்ததா? இல்லையா? என்ற வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ராம் லல்லா விராஜ்மான் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், இதுதொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு வழங்கப்பட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டினார். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.யு.கான், கோயிலின் சிதைவிலிருந்து மசூதி எழுப்பப்பட்டது என்று கூறியிருந்ததை சுட்டிக் காட்டினார் வைத்தியநாதன்.
ராம் லல்லா விராஜ்மான் சார்பாக ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் கே.பராசரனும் தன் பங்குக்கு வாதத்தை வலுவாக்கினார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ராமனின் ரகுவம்சத்தைச் சேர்ந்த யாரேனும் தற்போது வாழ்கிறார்களா? என்று உச்சநீதிமன்றம் ஆர்வத்தில் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.