காஷ்மீர் விஷயத்தில் மோடி – அமித்ஷா கூட்டணி இதுவரை சாமர்த்தியமாகவே கையாண்டு வருவதாகவும், அதேசமயம் அப்பகுதியின் கொந்தளிப்பை அவர்கள் சரியான நேரத்தில் அமைதிப்படுத்தவில்லை என்றால், நிலைமை நிச்சயம் மோசமாகிவிடும் என்றும் கூறியுள்ளார் கட்டுரையாளர் ஜோதி மல்கோத்ரா.
அவர் கூறியுள்ளதாவது, “காஷ்மீரை மோடி விழுங்குவதாக காஷ்மீர் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால், நிலைமையை அவரும் அமித்ஷாவும் இப்போதுவரை நன்றாகவே கையாண்டு வருகிறார்கள். கைது நடவடிக்கைகள் மற்றும் தனிமனித உரிமைகள் குறித்து கவலை தெரிவித்துவிட்டு அமெரிக்கா அதோடு நிறுத்திக்கொண்டது.
ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று கூறியதுடன் நிறுத்திக்கொண்டார். முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்போ அல்லது வேறு ஏதேனும் முக்கிய முஸ்லீம் நாடோ இன்னும் வாய் திறக்கவில்லை.
சீனாவிடமிருந்தும் பெரியளவில் எதிர்ப்பு எழவில்லை. பாகிஸ்தான் மட்டுமே தொடர்ந்து சர்வதேச தரப்பில் தொடர்புகொண்டு வருகிறது. எனவே, மோடி – ஷா கூட்டணி சரியாகவே காய் நகர்த்தியுள்ளார்கள். ஆனால், கூடிய விரைவில் கொந்தளிப்பை அவர்கள் அமைதிப்படுத்தியாக வேண்டும். இல்லையெனில், பிரச்சினை சிக்கலாகி பூதாகரமாக உருவெடுக்க அதிகநேரம் எடுக்காது” என்றும் கூறியுள்ளார்.