ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால், தங்களின் தனித்த அடையாளத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்பி வருகின்றனர் அம்மாநில மக்கள்.
“அரசின் இந்த முடிவால் நாங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். ஏனெனில் இந்த சட்டப்பிரிவுடன் எங்களின் சென்டிமென்ட்டும் பிணைந்திருந்தது. இந்த சட்டப்பிரிவை நீக்கியுள்ளதன் மூலம், இம்மாநிலத்தின் முஸ்லீம் பெரும்பான்மை என்ற அடையாளம் இழக்கப்படும்”.
“மாநிலத்தை கடந்த 70 ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள், இந்த சிறப்பு சட்டத்தை, மத்தியில் ஆண்ட பல்வேறு அரசுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு வலிமையற்றதாகவே வைத்திருந்தன. தற்போது மக்களின் கோபம் வெடிப்பதற்கான நிலை ஏற்பட்டுள்ளது”.
“அவர்களால் எவ்வளவு நாட்களுக்குத்தான் எங்களை வீட்டுச் சிறையில் வைத்திருக்க முடியும்?”.
“இந்த சிறப்பு சட்டத்தை நீக்கிவிட்டதால், நாங்கள் எங்களின் உணர்வை வெளிப்படுத்த முடியாது என்று அர்த்தமல்ல”.
“காஷ்மீரில் இயங்கும் முக்கிய அரசியல் கட்சிகள்தான் இன்றைய நிலைக்கு பிரதான காரணம்”.
“நாங்கள் எங்களின் தனித்த அடையாளத்தை இழந்துவிட்டதாய் உணர்கிறோம். அரசின் இந்த முடிவானது மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்கு பதிலாக கிளர்ச்சியைத்தான் உருவாக்கும்”.
மேற்கண்ட கருத்துக்களை மக்கள் தங்களின் உளக்குமுறல்களாய் கொட்டி வருகிறார்கள்.