டில்லி
அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல், தனது நிறுவன ஊழியர்களுக்கு ஜூலை மாத ஊதியத்தை நேற்று (05-08-2019) வழங்கி உள்ளது.
அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த 2018-19 ஆம் வருடம் ரூ. 19308 கோடி வருமானக் குறைவால் ரூ.14002 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. இந்த நஷ்டம் கடண்டஹ் 2015-16 ஆம் வருடம் ரூ.4859 கோடியாகவும், 2016-17 ஆம் வருடம் 4793 கோடியாகவும் 2017-18 ஆம் வருடம் ரூ.7993 கோடியாகவும் இருந்தது.
பி எஸ் என் எல் நிறுவனத்தில் 1,65,179 பேர் பணி புரிந்து வருகின்றனர். மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களை விட இது பன்மடங்கு அதிகமாகும். இதனால் ஊழியர்களின் ஊதியம் அளிக்கத் தேவையான அளவு வருமானம் கூட பி எஸ் என் எல் ஈட்டாமல் இருந்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு மாத இறுதி நாள் அன்று ஊதியம் வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்குவது தாமதமாகி வருகிறது.
கடந்த வாரம் பி எஸ் என் எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் ஜூலை மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படாமல் உள்ளதாகவும் எப்போது வழங்கப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அரசு நிறுவனமான பி எஸ் என் எல் தனது ஊழியர்களுக்குக் குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காதது குறித்து பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பி எஸ் என் எல் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பி கே பர்வார் ஊழியர்களுக்கு நேற்று ஊதியம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினமே பெரும்பாலான ஊழியர்கள் ஊதியம் பெற்றுள்ளதாகவும் இன்று அனிஅத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்தார்.