மும்பை: உலக போதை மருந்து பயன்பாட்டு தடுப்பு அமைப்பான WADA, தனது பட்டியலை மறுவரையறை செய்ய வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் போதை பயன்பாட்டு தடுப்புப் பிரிவின் மேலாளர்.
சமீபத்தில் இந்திய டெஸ்ட் துவக்க வீரர் பிரித்வி ஷா,

தடைசெய்யப்பட்ட போதை மருந்தைப் பயன்படுத்தினார் என்று சோதனையில் கண்டறியப்பட்டு, அவருக்கு 8 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்தியதாக கூறப்பட்ட மருந்து டெர்புடலின்.

தான், இருமல் மருந்து மட்டுமே உட்கொண்டதாக வாக்குமூலம் அளித்தார் ஷா. அதனடிப்படையில் அவருக்கான தடை பின்தேதியிடப்பட்டு வழங்கப்பட்டது. பொதுவாக, சாதாரண இருமல் மருந்துகளில் 50% அளவிற்கு டெர்புடலின் கலந்துள்ளது. எனவே, இருமல் மருந்தை எடுத்துக்கொள்ளும் வீரர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, அனைத்து விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு, WADA தனது விதிமுறைகளை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு போதை மருந்து தொடர்பான ஆராய்ச்சிக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்தாலும், புதிய வேண்டுகோள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் விதிமுறைகள் விளையாட்டிற்கு உகந்த வகையில் இருக்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.