cameron
லண்டன்:
ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் நாட்டில் இருக்க முடியாது என இங்கிலாந்து பிரதமர் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டைமஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் முஸ்லிம் பெண்கள் சிறிய அளவிலோ அல்லது அறவே ஆங்கிலம் தெரியாமல் உள்ளனர். இதனால் மனைவி, குழந்தைகள், சகோதரிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஆண்கள் தவிக்கின்றனர். சிலர் குறைந்த அளவு ஆங்கில அறிவுடன் நாட்டிற்குள் வந்துவிடுகின்றனர். அதன் பிறகு அவர்கள் அதை முன்னேற்றும் செயலில் ஈடுபடுவதில்லை.
ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் நாட்டில் நீங்கள் தொடர்ந்து தங்கியிருப்பதை பாதிக்கும்.  பெண்களுக்கு ஆங்கில வகுப்புகள் நடத்துவதற்காக அரசு 28 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல், திருமணம் முடிந்து மனைவி விசாவில் நாட்டிற்குள் வந்த பெண்களிடம் ஆங்கில அறிவு குறித்த சோதனை தொடங்கும்.
இரண்டரை ஆண்டுக்குள் ஆங்கில தேர்வில் தேர்ச்சி பெறாத பெண்கள் நாட்டில் இருக்க முடியாது. குறைவான ஆங்கில அறிவுடன் பேசுவோருக்கும், தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆங்கிலேயர் சமுதாயத்துடன் ஒத்துபோகாதவர்களால், தீவிரவாதத்துக்கு எதிரான செயல்கள் பாதிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.