டில்லி

திருமணத்தை முன்னிட்டு ஆண்கள் இடம் பெயர்வது கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்காகி உள்ளது.

நமது நாட்டில் நடைபெறும் திருமணங்களில் ஒரே ஊரில் உள்ளவர்கள் திருமணம் செய்துக் கொள்வது மிகவும் அரிதாகவே நடைபெறுகிறது. மணமகன் மற்றும் மணமகள் வேறு இடங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் நமது நாட்டில் பொதுவாக திருமணம் முடிந்ததும் பெண்கள் இடம் மாறுவது பல காலமாக நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பெண்கள் கணவன் இருக்கும் இடத்துக்குக் குடி பெயர்வதால் என்பதை அனைவரும் அறிவார்கள்.

இந்நிலையில் கடந்த பத்தாண்டு கணக்கெடுப்பின்படி திருமணத்தினால் ஆண்கள் இடம் பெயர்வது இரு மடங்காகி உள்ளது. இவ்வாறு அதிகரிப்பது வடகிழக்கு மற்றும் தென் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதில் மேகாலயா, தமிழகம், மிசோரம், கேரளா, அசாம், மணிப்பூர், கர்நாடகா முதலிய மாநிலங்களில் ஆண்கள் திருமணத்தினால் அதிக அளவு இடம் பெயர்கின்றனர்.

திருமணத்தினால் இடம் பெயரும் ஆண்களின் எண்ணிக்கை அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் மிகவும் குறைவாக உள்ளன. இந்த மாநிலங்களில் பெண்களுடன் ஒப்பிடும் போது 2% க்கும் குறைவான ஆண்களே இடம் பெயர்கின்றனர். ஆனால் எண்ணிக்கை அளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தினால் இடம் பெயரும் ஆண்கள் எண்ணிக்கை மும்மடங்காகி உள்ளது.

இவ்வாறு இடம் பெயரும் ஆண்களில் பெரும்பாலானோர் நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்பவர்களாக உள்ளனர். இதில் தமிழகத்தில் அதிக அளவில் ஆண்கள் திருமணம் ஆன பிறகு நகரத்துக்கு மனைவி இல்லத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதற்கு நேர்மாறாக மேகாலயாவில் அதிக அளவில் ஆண்கள் கிராமப்புறங்களுக்கு இடம் பெயருகின்றனர். மற்ற வட இந்திய மாநிலங்களில் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வது அதிகமாக உள்ளது.