கட்சிமாறும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் பதவியை ராஜினாமா செய்து மறுதேர்தலை சந்திக்க வேண்டும். அதுதான் ஜனநாயக அடிப்படை என்று கூறியுள்ளார் கட்டுரையாளர் அம்ரிதா லால்.
சமீபத்தில் கர்நாடகா, கோவா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுக்கு தாவிய கூத்துகள் அரங்கேறியுள்ளன. கோவா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தாவியதால், அவர்களின் மீது கட்சித்தாவல் தடைச்சட்டம் பாயாமல் தப்பிவிட்டார்கள்.
ராஜ்யசபாவில் உறுப்பினர்களாக இருந்த தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த 4 பேர், பாரதீய ஜனதாவுக்கு தாவியதிலும் அவர்களின் பதவிக்கு ஆபத்தில்லை. தெலுங்கானாவில் கட்சித்தாவிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே, காங்கிரஸ் டிக்கெட்டில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளர்களை தோற்கடித்தவர்கள். கோவாவில் 2 மாதங்களுக்கு முன்னர் நடந்த இடைத்தேர்தலில், பாரதீய ஜனதா வேட்பாளரை தோற்கடித்த காங்கிரஸ் உறுப்பினரும் கட்சித் தாவியுள்ளார்.
நிலைமை இப்படியிருக்க, இவர்கள் அப்படியே எதிர்க்கட்சிக்கு தாவுவதில் ஏதேனும் ஜனநாயக மாண்பு இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
கடந்த 1980களில், ராஜீவ் காந்தியுடன் முரண்பட்ட அவரது அமைச்சரவை சகா விஸ்வநாத் பிரதாப் சிங், தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, மறுபடியும் அலகாபாத் தொகுதியில் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றார்.
அதேபோன்று கடந்த 1984ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், கர்நாடக மாநிலத்தை ஆண்ட ராமகிருஷ்ண ஹெக்டேவின் ஜனதாதளம் படுதோல்வி அடைந்தபோது, அத்தோல்விக்குப் பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ராமகிருஷ்ண ஹெக்டே.
அவர் அவ்வாறு செய்திருக்க வேண்டிய தேவையே எழவில்லை என்றாலும், அரசியல் மாண்பைக் கடைபிடித்தார் ஹெக்டே. பின்னர், நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரின் கட்சிதான் வெற்றிபெற்றது.
நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது அரசியல் கட்சிகளை மையமாக வைத்தே செயல்படுகிறது. கட்சிகள்தான் அனைத்திற்குமான அடையாளர். எனவே, கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற ஒருவர் இன்னொரு கட்சிக்குத் தாவினால், அவர் முந்தையக் கட்சியில் போட்டியிட்டு வென்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலை சந்திப்பதே அடிப்படையான கண்ணியம். ஆனால், இதை இன்றைய அரசியல் களத்தில் யாரும் சட்டை செய்வதில்லை என்றுள்ளார் கட்டுரையாளர்.