மும்பை

மும்பை தாராவியில் தன்னையும் தன் மகளையும் கடித்த பாம்பை மருத்துவரிடம் ஒரு பெண் எடுத்துச் சென்றுள்ளார்.

மும்பை நகரில் உள்ள தாராவி பகுதியில் உள்ள ராஜிவ் காந்தி நகரில் சோனென் சால் என்னும் இடம் உள்ளது.  இந்த பகுதிகளில் சிறிய குடியிருப்புக்கள் நிறைய உள்ளன.   இவற்றில் ஒரு குடியிருப்பில் சுல்தானா கான் என்னும் 34 வயது பெண்ணும் அவருடைய 18 வயது மகளான தேசீன் ஆகியோர் வசித்து வந்தனர்.

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரு பாம்பு இவர்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டது.  அந்த பாம்பு சுல்தானா மற்றும் அவர் மகள் தேசீன் ஆகிய இருவரையும் கடித்து விட்டது.    உடனடியாக அந்த பாம்பை பிடித்த சுல்தானா தனது மகளுடன் அந்த பாம்பையும் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவரிடம் அந்த பாம்பை காட்டி அந்த பாம்புக் கடி விஷத்துக்கு மாற்று மருந்து அளிக்குமாறு சுல்தானா கேட்டுக் கொண்டுள்ளார்.   ஏற்கனவே இந்த பகுதியில் வேறொரு பெண்ணை பாம்பு கடித்த போது அவர் பாம்பைப் பற்றி அளித்த விவரத்தைக் கொண்டு மருத்துவர் மருந்து அளித்துள்ளார்.

அந்த மருத்துவ மனை பொறுப்பாளர் பிரமோத் இங்கால், இருவருக்கும் மருந்து கொடுத்துள்ளார்.  அத்துடன் பாம்பை இவ்வாறு கொண்டு வருவது அபாயகரமான செய்கை என சுல்தானாவுக்கு அவர் அறிவுரை அளித்தார்.  அந்த பாம்பு விலங்குகள் உரிமை ஆர்வலர்களிடம் அளிக்கப்பட்டது.