டில்லி
வாகன விற்பனை வீழ்ச்சி அடைந்து வருவதால் பலர் பணி வாய்ப்பை இழக்க நேரிடலாம் என கூறப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக வாகன விற்பனை பெரிதும் குறைந்து வருகிறது. இந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜுன் மாதம் முடிந்த காலாண்டில் கடும் விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பல பிரபல வாகன நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. இதற்காக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் அரசிடம் இருந்து ஜிஎஸ்டி விலக்கு உள்ளிட்ட பல உதவிகளை கோரி உள்ளது.
பல ஆட்டோமொபைல் முகவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடி உள்ளனர். வேறு சில முகவர்கள் தங்களிடம் உள்ள வாகனங்களை விற்கும் வரையில் விற்பனை நிலையங்களை நடத்த முடிவு செய்துள்ளனர். எந்த ஒரு முகவரும் புது வாகனங்களுக்கு ஆர்டர் அளிக்கவில்லை. எனவே வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பணி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜன் வதேரா, “வாகன உற்பத்தி நிறுவனங்கள் புதியதாக ஆட்களை பணி அமர்த்துவதை முழுமையாக நிறுத்தி விட்டது. ஏற்கனவே உள்ள பணியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதே நிலை நீடித்தால் அவர்களும் பணி இழக்கும் அபாயம் ஏற்படக்கூடும். தற்போது நாங்கள் அரசின் மின்சார வாகன உற்பத்தி திட்டத்தை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
அதே நேரத்தில் இந்த புதிய பணியை உடனே தொடங்க முடியாது என்பதால் ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கு நாங்கள் எவ்விதம் பணி அளிப்போம் என தெரியாத நிலை உள்ளது. வாகன உற்பத்தி துறையில் இப்போது பணியில் உள்ள 3.7 கோடி மக்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அரசு எங்களுக்கு உதவ வேண்டும். முதலில் சிறிது சிறிதாக விழ்ச்சி அடைந்த வாகன விற்பனை தற்போது பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.