டில்லி:
வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி முதல் மின்சார இருசக்கர வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நிதிஆயோக் மத்தியஅரசுக்கு ஆலோசனை கூறி உள்ளது. இதையடுத்து, அதற்கான முயற்சியில் ஈடுபடுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
சமீபத்தில் மத்தியநிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்த பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மின்சார வாகன கடன்களுக்காக செலுத்தப்படும் வட்டியைக் காட்டி ரூ.1.5 லட்சம் வரையில் வருமான வரிச் சலுகை பெறலாம் என்று அறிவித்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிக்கும் முயற்சியாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதை நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் வரவேற்றிருந்தார். மின்சார வாகனங்கள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்க விரும்புகிறது என்பதையே மத்திய பட்ஜெட் தெளிவாகக் காட்டுகிறது என்று கூறியிருந்தார். மேலும், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை மேலும் அதிகரிப்பதன் மூலம் அவற்றின் பயன்பாடு குறையும் என்பதுடன், அவற்றுக்கு மாற்றாக இருக்கும் மின்சார வாகனங்களின் தேவை அதிகரிக்கும் என்று ராஜீவ் குமார் கூறினார்.
மூன்று சக்கர வாகன போக்குவரத்தில் 2023-க்கு உள்ளாகவும், இருசக்கர வாகன போக்குவரத்தில் 2025-க்கு உள்ளாகவும் முழுமையாக மின்சார வாகன பயன்பாட்டை கொண்டுவர வேண்டுமென நீதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான உறுதியான நடவடிக்கைகளை பரிந்துரைக்கு மாறு, கடந்த மாதம் நடைபெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுடனான கலந்தாலோசனைக் கூட்டத்திலும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நிதி ஆயோக் பரிந்துரைப்படி, 150 சிசிக்கு குறைவானவற்றில் முழு எலக்ட்ரிக் வாகனம் மட்டுமே விற்பனைக்கு அனுமதிப்பது பற்றியும், 2023 ஏப்.1முதல் விற்கப்படும் 3 சக்கர வாகனங்களும் மின்சார வாகனங்களாகவே இருக்க வேண்டியது குறித்தும், மத்திய அரசு தொழில் முனைவோருடன் ஆலோசிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.