பெங்களூரு
கர்நாடக முதல்வர் குமாரசாமி தாம் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என செய்தியாளர்களிடம் வினா எழுப்பி உள்ளார்.
கர்நாடகாவில் அதிக உறுப்பினர்கள் உள்ள கட்சி என்னும் முறையில் ஆட்சி அமைத்த பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திகாமலே ராஜினாமா செய்தது. அடுத்து மஜத கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. மஜத வை சேர்ந்த குமாரசாமி முதல்வராகவும் காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர்.
இந்த ஆட்சியை கலைக்க பாஜக் முயல்வதாக பல முறை குற்றம் சாட்டப்பட்டது. பாஜக தொடர்ந்து இதை மறுத்து வருகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் 224 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 78 காங்கிரஸ், 37 மஜத மற்றும் ஒரு பகுஜன் சமாஜ் அகியோர் கூட்டணியில் இருந்தனர். இதை தவிர இரு சுயேச்சைகள் ஆதரவும் அரசுக்கு இருந்தது.
தற்போது அந்த இரு சுயேச்சைகளும் அமைச்சரவையில் இருந்து விலகி உள்ளனர். அத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 உறுப்பினர்களும் 3 மஜத உறுப்பினர்களும் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். எனவே தற்போது கூட்டணி உறுப்பினர்கள் எண்ணிக்கை 110 ஐ நெருங்குகிறது. இது பெரும்பான்மை அல்ல என்பதால் குமாரசாமி ராஜினாமா செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் குமாரசாமி, “நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? தற்போது அதற்கு என்ன தேவை வந்துள்ளது? கடந்த 2009-10 ஆம் வருடம் சில அமைச்சர்கள் உள்ளிட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகிய போது அப்போதைய முதல்வர் எடியூரப்பா பதவி விலகவில்லை. அப்படி இருக்க என்னை மட்டும் ஏன் ராஜினாமா செய்ய சொல்கிறீர்கள்?” என வினா எழுப்பி உள்ளார்.