பாரதீய ஜனதாவின் பல தலைவர்கள் வயதைக் காரணம் காட்டி ஓரங்கட்டப்பட்டுவிட்ட நிலையில், 75 வயதைத் தாண்டிய எடியூரப்பா மட்டும், கர்நாடக அரசியலில் பாரதீய ஜனதா சார்பாக இன்னும் கோலோச்சி வருவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

அவர் மட்டும் எப்படி மோடி & அமித்ஷா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் என்ற ஆச்சர்யமும் பலருக்கு எழுகிறது. உண்மைதான், அத்வானி, மனோகர் ஜோஷி மற்றும் சாந்த குமார் மட்டுமல்ல, குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல் கூட வயதைக் காரணம் காட்டி பதவியிறக்கப்பட்டார்.

ஆனால், எடியூரப்பா மட்டும் இன்னும் முதல்வர் ரேசிலேயே இருப்பதற்கு காரணம்? வேறு ஒன்றுமில்லை, எடியூரப்பாவைவிட செல்வாக்கு மிக்க தலைவர் கர்நாடாக பாரதீய ஜனதாவுக்கு இன்னும் அமையவில்லை.

கர்நாடக மக்கள்தொகையில் 16% உள்ள லிங்காயத்துகளின் பெரிய ஆதரவைப் பெற்ற ஒரு தலைவராக அவர் திகழ்கிறார். அவர் 2013ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து நின்றபோது, லிங்காயத்து சமூகத்து வாக்குகளை பெருமளவில் இழந்தது பாரதீய ஜனதா. மாநிலம் முழுவதும் அவர் பரவலாக அறியப்பட்ட தலைவராகவும், பெருமளவிலான தொண்டர்களின் ஆதரவைப் பெற்ற தலைவராகவும் திகழ்கிறார்.

சதானந்த கவுடா மற்றும் ஜெகதீஷ் ஷட்டர் ஆகியோர் முதல்வராக பதவி வகித்திருந்த போதிலும், இவருக்கு இருக்கும் செல்வாக்கும் அறிமுகமும் அவர்களுக்கு இல்லை. எனவேதான், எடியூரப்பா இன்னும் ரேசிலேயே இருக்கிறார். மோடி மற்றும் அமித்ஷா இணையால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை.

அதேசமயம், எடியூரப்பாவும் மோடியின் தீவிர ஆதரவாளராகவே தன்னை, தொடக்கம் முதலே வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.