பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் பாரதியஜனதா ஆட்சி அமைக்கும் என்று, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் (ஜேடிஎஸ்) கட்சி எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் உள்பட 14 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில், அங்கு குமாரசாமி தலைமையி லான கூட்டணி ஆட்சிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இரு கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநில அரசு கவிழ்ந்தால், நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா கூறி உள்ளார்.
ஏற்கனவே ஆபரேஷன் தாமரை என்ற பெயரில், சுயேச்சை எம்எல்ஏக்களையும், சில அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பண ஆசைக்காட்டி, ஆட்சியை கவிழ்க்க மாநில பாஜக முயற்சி மேற்கொண்டு வந்தது. அது தோல்வியில் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும், மதசார் பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது.
மொத்த 224 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில்,கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது எந்தவொரு கட்சிக்கும் அருதி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸ் ஆதரவுடன் ஜனதாதளம் கூட்டணி ஆட்சியை அமைத்தது.
தற்போதைய நிலையில், இதுவரை 15 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டால், ஆட்சி கவிழ்வதை தவிர்க்க முடியாது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை
காங்கிரஸ் கட்சி : 79 பேர், மதசார்பற்ற ஜனதாதளம் : 37 பேர், பகுஜன் சமாஜ் கட்சி : 3 பேர் உடன் சுயேச்சை : 2 பேர் ஆக121 ஆக இருந்து வந்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை 113 என்ற நிலையில், ஆட்சிக்கு போதுமானதை விட அதிக அளவிலான எம்எல்ஏக்கள் இருந்தால் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது 15 எம்எல்ஏக்கள் பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள நிலையில், அது ஏற்கப்பட்டால், ஆட்சி அமைப்பதற்கசான பெரும்பான்மையை காங்கிரஸ் கட்சி இழக்க நேரிடும்.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி தன்னிடம் உள்ள 105 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மெஜாரிட்டி நிரூபித்து ஆட்சி அமைக்க முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் உள்பட சுயேச்சை எம்எல் ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவு தர முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சட்டமனற்த்தில் பாஜக மெஜாரிட்டி பலம் பெற வாய்ப்பு உள்ளது.
இதை கணக்கில் கொண்டே, பாரதியஜனதா கட்சி தனது சித்து விளையாட்டுக்களை கர்நாடக மாநிலத்தில் அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளை சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை இதுவரை சபாநாயகர் ஏற்கவில்லை. இது தொடர்பாக அவர் எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்க கோரலாம் அல்லது நேரில் வந்து தெரிவிக்கும்படி உத்தரவிடலாம் என்று தெரிகிறது.
இதற்கிடையில், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள 13 எம்.எல்.ஏ.க்களையும் கட்சி தாவல் சட்டத்தின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யலாமா என்பதும் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சபாநாயகரின் முடிவைத்தொடர்ந்தே கர்நாடக அரசியல் நிலவரத்தின் முடிவு தெரிய வரும்.
இந்த சூழ்நிலையை பாரதியஜனதா கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, மாநிலத்தில் அதிக எம்.எல்.ஏ.க்களை பாரதியஜனதா கட்சிதான் வைத்துள்ளது. இப்போது மாற்று கட்சியை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் எங்களுடைய கட்சியின் செயல்பாடுகள், பிரதமரின் வளர்ச்சி திட்டங்கள், கொள்கைகள் காரணமாக ஈர்க்கப்பட்டு எங்களோடு வந்துள்ளனர் என்று கூறியவர். ஆளும் கூட்டணி அரசின் தலைவர்கள் தெருச்சண்டை போடுபவர்கள் போல நடந்து கொள்கிறார்கள். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. அதைகூட கவனிக்க ஆள் இல்லை.
இந்த சூழ்நிலையில் நாங்கள் ஆட்சி அமைப்பது அவசியமான ஒன்று என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார்.