சென்னை:
தமிழக தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் இந்த மாதத்துடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அவருக்கு புதிய பதவி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிஜாவை தமிழ்நாடு மின்சாரம் ஒழுங்குமுறை வாரியத் தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அந்த பதவிக்கு அதிகாரிகளை நியமிக்காமல், தமிழகஅரசு காலம் தாழ்த்தி வந்த நிலையில், தற்போது அந்த பதவியை கிரிஜாவுக்கு வழங்க எடப்பாடி அரசு விரும்புவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு பதவி ஓய்வு பெற்ற தற்போதைய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு மேலும் 2 ஆண்டுகாலம் தமிழக அரசு பணி நீட்டிப்பு வழங்கிய நிலையில், அவரும் இந்த மாதத்துடன் ஓய்வுபெற உள்ளார்.
அவருக்கு மேலும் பணி நீட்டிப்பு செய்ய முடியாத நிலையில், அவரை தமிழக அரசு பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசு ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மீண்டும் பொறுப்புகளை வழங்கி, பணியில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க மறுத்து வருவது அரசு அதிகாரிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.