சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தன் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதையடுத்து திமுகவினர் நீதிமன்றத்தில் கூடி விட்டனர். வழக்கு விசாரணை பின்னர் மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
“கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா சாதித்தது என்ன?” என்ற தலைப்பில் ஆனந்தவிகடன் வார இதழில் கடந்த நவம்பர் மாதம் கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையை முரசொலி நாளிதழில் வெளியிட்டு, கட்டுரை ஒன்றை எழுதினார் கருணாநிதி.
இதையடுத்து, முரசொலி இதழின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். அவரது சார்பில் அரசு வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்த மனுவில், முரசொலி நாளிதழில், கலைஞர் கேள்வி பதில் பகுதியில் அதிமுக ஆட்சி குறித்து செய்தி வெளிவந்தது.
இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது. முதல்வருக்கு மக்களிடம் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே அதை எழுதிய கருணாநிதி, வெளியிட்ட முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது அவதூறு சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவைப் பரிசீலித்த மாவட்ட முதன்மை நீதிபதி ஆதினாதன், வழக்கு ஆவணங்களை ஜனவரி 18ம் தேதி நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கருணாநிதிக்கும், முரசொலி செல்வத்துக்கும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.
பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் கருணாநிதி நேரில் ஆஜரானதில்லை. ஆனால் இந்த வழக்கில் தானே ஆஜராவதாக அறிவித்தார். 92 வயதான கருணாநிதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்துக்கு வருவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று காலை, நீதிமன்றத்தில் கருணாநிதி ஆஜரானார். முரசொலி செல்வமும் ஆஜரானார்.
கருணாநிதி சார்பில் வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், ஆலந்தூர் பாரதி, கிரிராஜன், குமரேசன், பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, ஷாஜகான் உள்ளிட்ட ஏராளமான பேர் ஆஜராகினர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் வந்திருந்தார்.
பின்னர் வழக்கு விசாரணை மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கருணாநிதி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானதால் நீதிமன்ற வளாகம் முழுவதும் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. அனைத்து நுழைவு வாயில்களிலும் கடுமையான சோதனைக்கு பிறகே வழக்கறிஞர்களும், அனுமதிக்கப்பட்டனர். நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே திமுகவினர் பெருமளவில் திரண்டிருந்தனர். இதனால் அந்தபகுதியில் பரபரப்பு நிலவியது.
நீதிமன்றத்தில் ஆஜராகி திரும்பிய கருணாநிதியிடம், “பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை இந்த அரசு திரும்பப் பெற வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அவதூறு வழக்கு தொடர்பான விசாரணையில் நான் ஆஜராவதில் அந்தக் கோரிக்கை என் உள்ளத்திலே இருக்கிறது என்பதை நாடு நன்றாக அறியும்” என்று கருணாநிதி பதில் அளித்தார்.