நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக இருந்தவர் குமாரதாஸ். இன்று திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் மரணமடைந்தாக கூறப்படுகிறது.
தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் துணை தலைவராக குமாரதாஸ் பதவி வகித்து வந்தார். இவர் ஜனதாதளம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பின்னர் மீண்டும் காங்கிரஸ் கடைசியாக மீண்டும் வாசன் துவக்கிய தமிழ் மாநில காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.
இடையில் கடந்த டிசம்பர் 2002ம் ஆண்டில், தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட ஒரு புதிய கட்சியையும் குமாரதாஸ் உருவாக்கினார்.
இவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட போது இரு முறை ஜனதா தளம் சாா்பிலும், இரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தலில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வானது குறிப்பிடத்தக்கது.
1984-ம் ஆண்டு மற்றும்1991 ஆம் ஆண்டு ஜனதா கட்சியின் வேட்பாளராகவும், 1996 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) என்ற பெயரில் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குமாரதாஸ் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கியவர் குமாரதாஸ்; தொகுதி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான குமாரதாஸ் மக்கள் தொண்டாற்றியவர் என தெரிவித்துள்ளார்.