நியூயார்க்: அமெரிக்கா – சீனா இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போரில், அமெரிக்காவின் முடிவால், அந்நாட்டில், கிறிஸ்தவப் புனித நூலான பைபிளின் விலை ஏறும் வாய்ப்புள்ளதால், பல கிறிஸ்தவ மத நிறுவனங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மீது கோபத்தில் உள்ளன.
இந்த நிறுவனங்கள் டொனால்ட் டிரம்பை ஆதரிப்பவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் பல சீன பொருட்களுக்கு கூடுதலான சுங்க வரியை விதித்து அமெரிக்கா ஆட்டம் காட்டிய நிலையில், பதிலுக்கு, அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களின் மீது சீனாவும் சுங்க வரியை அதிகரித்து கெத்து காட்டியது.
ஆனால், இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த நடவடிக்கையால் புனித நூலான பைபிளின் விலை அமெரிக்காவில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால், அமெரிக்காவுக்கு தேவையான பைபிள்களில், அதிகளவிலானவை சீனாவில்தான் தயார் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும், உலகளவில் அச்சாகும் பைபிள் நூல்களில் பாதிக்கும் மேலானவை சீனாவில்தான் தயாராகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பைபிளுக்கு கூடுதல் வரிவிதிப்பிலிருந்து விலக்களிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், தேவாலயங்கள், மதப் பள்ளிகள் மற்றும் இதர நிறுவனங்கள் ஆகியவை கூடுதல் தொகையை செலுத்த வேண்டியதிருக்கும்.