விஜயவாடா: சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தை ஒட்டி கட்டப்பட்ட பிரஜா வேதிகா என்ற அரசு கட்டடத்தை ஜெகன்மோகன் அரசு இடித்துத் தள்ளியதன் மூலம், சந்திரபாபு நாயுடு தொடர்பான விஷயத்தை தான் எப்படி கையாள்வேன் என்பதை ஜெகன்மோகன் ரெட்டி வெளிப்படையான முறையில் தெரிவித்துள்ளார்.
பிரஜா வேதிகா கட்டடத்தை கைப்பற்ற வேண்டாம் என்றும், அதை மக்களை சந்திக்கவும், கூட்டங்களை நடத்தவும் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தானே பயன்படுத்திக் கொள்கிறேன் என்றும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருந்தார் சந்திரபாபு நாயுடு. ஆனால், அக்கடிதத்திற்கு ஜெகன் தரப்பிலிருந்து எந்த பதில் கடிதமும் எழுதப்படவில்லை.
அதேசமயம், அக்கட்டடத்தில் ஒரு அரசு கூட்டத்தை நடத்திவிட்டு, ஊழல் மற்றும் சுற்றுச்சூழல் முறைகேட்டு சின்னமாக உள்ள அக்கட்டடத்தை இடிப்பதாக அறிவித்தார் ஜெகன்மோகன். இந்தக் கட்டடம் தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சந்திரபாபு நாயுடு தொடர்பான விஷயங்களில் இப்படி அதிரடியான முடிவுகளை எடுப்பதன் மூலம், ஜெகன்மோகன் ரெட்டியின் பழிவாங்கும் அரசியல் வெளிப்படையாக தெரியவருவதோடு, சந்திரபாபு முறைகேடான ஆட்சியை நடத்தினார் என்ற ஒரு பிம்பத்தை மக்கள் மனதில் ஆழப்பதிய வைப்பதையும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறார் ஜெகன்மோகன் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அதேசமயம், சுற்றுச்சூழல் விதிமுறை மற்றும் இதர அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள பிற கட்டடங்கள் மற்றும் ஜெகன்மோகனின் தந்தை ராஜசேகர ரெட்டியின் சிலைகள் ஆகியவற்றையும் இடிக்க முதல்வர் முன்வருவரா? என்கின்றனர் தெலுங்குதேச கட்சியினர்.