டில்லி

ஜெய்ஸ்ரீராம் என சொல்லாத இஸ்லாமிய இளைஞர் ஜார்க்கண்டில் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் 22 வயதான தப்ரீஸ் அன்சாரி என்னும் இளைஞர் அவர் நண்பர்களுடன் ஒரு வீட்டில் திருட முயன்ற போது பிடிபட்டுள்ளார்.. அவருடைய நண்பர்கள் தப்பி ஓடி விட்டதால் இவரை ஒரு கும்பல் சேர்ந்து அடித்து நொறுக்கி உள்ளது. அப்போது இவர் பெயர் தப்ரீஸ் அன்சாரி மற்றும் இஸ்லாமியர் என்பதை கும்பலில் உள்ளவர்கள் தெரிந்துக் கொண்டுள்ளனர்.

 

        அன்சாரி

 

கும்பலில் ஒருவர் அன்சாரியை ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட சொல்லி உள்ளார். அன்சாரி மறுத்ததால் அவரை மேலும் அடித்துள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அன்சாரியின் நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மரணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தையொட்டி நாடே பரபரப்பில் ஆழ்ந்தது. பல தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “ஒரு இளைஞர் மீது ஒரு கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியது மனிதத்தன்மைக்கு கிடைத்த பெரும் அடியாகும். இறக்கும் தருவாயில் இருந்த அந்த இளைஞரை 4 நாட்களுக்கு காவல்துறையினர் காவலில் வைத்திருந்தது கொடுமையானது. இது குறித்து பாஜக ஆளும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைதி மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது.” என பதிந்துள்ளார்.