க்னோ

க்னோ நகரில் கோமதி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு விழாவுக்கான செலவை யோகி அரசு ஏற்க மறுத்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது 93ஆம் வயதில் 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி மறைந்தார். அவரது அஸ்தி நாடெங்கும் உள்ள பல நதிகளிலும் கடலிலும் கரைக்கப்பட்டது. அவ்வாறு 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று லக்னோவில் கோமதி நதியில் அவரது அஸ்தி கரைக்கப்பட்டது. இதற்காக பிரம்மாண்டமான விழா  லக்னோவில் ஹனுமன் சேது பகுதியில் நடந்தது.

இந்த நிகழ்வுக்கு ரூ.2,54,29,250 செலவாகும் என கணக்கிடப்பட்டது. இதில் மேடை அமைப்பு, ஒலி மற்றும் ஒளி அமைப்பு, பந்தல், வேலி அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் அடங்கும். மாநில அரசு இந்த செலவை செய்ய லக்னோ முன்னேற்ற ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன் இந்த செலவுக்கான தொகையை மாநில அரசு விரைவில் திரும்ப அளிக்கும் என உறுதிஅளித்தது.

அதை ஒட்டி லக்னோ முன்னேற்ற ஆணையம் விழாவை ஏற்பாடு செய்தது. அதில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்த செலவுக்கான தொகையை திரும்ப அளிக்குமாறு லக்னோ முன்னேற்ற ஆணையம் மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதற்கு பதில் இல்லாததால் பல நினைவூட்டல் கடிதங்களையும் அனுப்பியது.

இறுதியாக கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று மாநில தகவல்துறை அளித்த பதிலில் நிதிநிலை அறிக்கையில் இது போன்ற விழாக்களுக்கு தொகை எதுவும் ஒதுக்கீடு செய்யபடவில்லை என்பதால் இந்த தொகையை வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே லக்னோ முன்னேற்ற ஆணையம் தங்களுக்கு செலவு செய்ய உத்தரவிட்ட அதிகாரியை குறித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இது ஒரு இந்தி செய்தித்தாளில் வெளியாகி உள்ளது. இதற்கு பாஜக தலைவர் ராகேஷ் திரிபாதி உள்ளிட்ட பலரும் இது யோகி அரசுக்கு அவமானம் தரும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் உ பி அரசு இது குறித்து எவ்வித கருத்தும் கூற மறுத்துள்ளது.