புதுடெல்லி:
2010-ம் ஆண்டு வரை 490 மில்லியன் டாலர் கருப்புப் பணத்தை இந்தியர்கள் பதுக்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேசிய பொது கொள்கை மற்றும் நிதி தொடர்பான நிறுவனம், தேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் ஆகிய 3 முக்கிய அமைப்புகளும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பான ஆய்வை நிறைவு செய்துள்ளன.
கடந்த 2010-ம் ஆண்டு வரை 490 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டில் இந்தியர்கள் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளதாக 3 நிறுவனங்களின் ஆய்வு தெரிவிக்கிறது.
அதேபோல், உள்நாட்டில் ரியல் எஸ்டேட், கனிமம், புகையிலை/குட்கா,திரைப்படம் மற்றும் கல்வித் துறையில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வறிக்கையில் இந்த சாராம்சத்தை மட்டும் திங்களன்று நிதித்துறை நிலைக்குழு மக்களவையில் சமர்ப்பித்தது.
அரசு சார்ந்த 3 நிறுவனங்கள் ஆய்வு செய்து, அதிகாரப்பூர்வமாக அறிக்கை சமர்ப்பித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அறிவுறுத்தலின் படி, 3 முக்கிய அரசு அமைப்புகளும் 2011-ம் ஆண்டு கருப்பு பண மதிப்பீட்டு ஆய்வை தொடங்கின.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும், இதுவரை பொதுவெளியில் இன்னும் வெளியிடவில்லை.
கடந்த 1997-2009-ம் ஆண்டு வரை மொத்த உற்பத்தியில் 0.2% முதல் 7.4 % வரை கருப்புப் பணம் புழக்கத்தில் இருந்ததாக, தேசிய பொது கொள்கை மற்றும் நிதி தொடர்பான நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
1980-2010 வரை 384 பில்லியன் டாலர் முதல் 490 பில்லியன் டாலர் வரை வெளிநாடுகளில் இந்தியர்களின் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொருளாதார ஆய்வு கவுன்சில் மதிப்பீடு செய்துள்ளது.
1990-2008 வரை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் 216.48 பில்லியன் டாலர் அளவுக்கு கருப்பு பணம் பதுக்கப்பட்டதாக தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் கண்டறிந்துள்ளது.