டில்லி

ங்கி மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு ஓடிய வைர வியாபாரி மெகுல் சோக்சியின் ஆண்டிகுவா நாட்டு குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளது.

பிரபல வைரை வியாபாரியான நிரவ் மோடியின் கூட்டாளி மெகுல் சோக்சி. இவர்களது நிறுவனத்தின் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு இருவரும் குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டனர். இவர்கள் இருவரும் ஆண்டிகுவா நாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர். நிரவ் மோடி அந்நாட்டு பாஸ்போர்ட் மூலம் லண்டனுக்கு சென்று அங்கு சர்வதேச காவல்துறையினரால் கைது செய்யப்படு சிறையில் இருக்கிறார்.

நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகிய இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ முயற்சி செய்து வருகிறது. நிரவ் மோடியை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அத்துடன் ஆண்டிகுவா பிரதமர் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அனுப்பி உள்ள கடிதத்தில் அவருடைய குடியுரிமையை ரத்து செய்து இந்தியா வுக்கு அனுப்பு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆண்டிகுவா பிரதமர் செய்தியாளர்களிடம், “மெகுல் சோக்சி இந்நாட்டில் முதலீடு செய்து தொழில் நடத்துவதற்காக குடியுரிமை பெற்றுள்ளார். அதற்கான கட்டணத்தை அவர் செலுத்தி உள்ளதால் இந்த குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் நாடு பொருளாதாரக் குற்றம் புரிந்து தப்பி வந்தவர்களுக்கு அடைக்கலம் அளிக்காது.

எனவே மெகுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்வது குறித்த ஆலோசனை நீதிமன்றம் மூலம் நடந்து வருகின்றது. அடுத்த மாதத்துக்குள் நீதிமன்ற உத்தரவு கிடைக்க வாய்ப்புள்ளது. அப்போது மெகுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளார். அது வரை அவர் இங்கிருந்து செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் கரிபியன் தீவில் தங்கி இருந்த மெகுல் சோக்சி உள்ளூர் செய்தி தொலைகாட்சி நிருபரிடம் தமக்கு உடல் நிலை சரியில்லாததால் பயணம் செய்யக் கூடாது என தெரிவித்துள்ளதாகவும் அதனால் உடல் நிலை சரியானதும் இந்தியாவுக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது மும்பை உயர்நீதிமன்றம் மெகுல் சோக்சியின் உடல்நிலை குறித்த அறிக்கையை அரசு மருத்துவர் பரிசீலிக்க வேண்டும் என கூறி உள்ளது. இது மெகுல் சோக்சி தரப்புக்கு மேலும் பின்னடைவை அளித்துள்ளது.