டெல்லி:

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள சேவா பவனில் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா மாநிலம் திட்ட வரைவு தாக்கல் செய்து,  அனுமதி கோரியுள்ள நிலையில் இன்று கூட்டம் நடைபெறுகிறது.

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையை ஒட்டியுள்ள மேகதாது மலைப்பகுதியில் அணை கட்டி தண்ணீரை சேமிக்க  கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டினால், தமிழகத்திற்கு வந்துகொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரும் நிறுத்தப்பட்டு விடும். இதன் காரணமாக மேகதாது அணை கட்ட தமிழக விவசாயிகளும், தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேகதாது அணை கட்டியே தீருவோம் கர்நாடக மாநில அரசும் அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து களமிறங்கி உள்ளன. மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை யில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ள நிலையில், கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, மேகதாது அணை கட்டுவது தொடர்பான மாநிலஅரசின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கும்படி மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக மாநிலஅரசும், மேகதாது அணை கட்டுவது தொடர்பான  வரைபடம் மற்றும் பட்ஜெட் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு மத்திய அரசுக்கு கர்நாடகா கடிதம் எழுதியது. மேலும், அணை கட்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்கள் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என வற்புறுத்தியிருந்தது.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சித்தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று  காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்ச கத்துக்கு உட்பட்ட சேவா பவனில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின்போது, தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி நீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு 1.72 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக மாநில அரசு மதிக்காத நிலையில், இன்று மீண்டும் கூட்டம் கூடியுள்ளது. இன்றைய கூட்டத்தில், தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தும் என்றும், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.