சின்னத்திரை நடிகர் சங்கத்தின் கட்டட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார் அந்த சங்கத்தின் தலைவர் ரவிவர்மா.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது :
சின்னத்திரை நடிகர் சங்கம் 2003ம் ஆண்டு துவக்கப்பட்டது. வாடகை கட்டடத்தில்தான் சங்கம் இதுநாள் வரை இயங்கி வருகிறது. சொந்த கட்டடம் கட்ட வேண்டும் . அதற்காக சின்னத்திரை நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியை மலேசிய அரசின் உதவியுடன் வருகிற ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி மலேசியாவில் ஷாஅலாம் ஷிலாங்கர் மெலாவாட்டி அரங்கில் நடத்த இருக்கிறோம்.
நடிகர் விஜய் சேதுபதி , சந்தானம் , நாசர் மற்றும் பி வாசு உள்ளிட்ட பல பெரிய திரை நடிகர்களும் கலந்து கொள்ள எதிர்பார்க்கிறோம் . இதில் கிடைக்கும் நிதியை கொண்டு சின்னத்திரை நடிகர் சங்கதிற்கு சொந்த கட்டடம் கட்டப்படும் என்றார். பேட்டியின் போது நடிகர்கள் ஆடுகளம் நேரன், மனோபாலா, சின்னி ஜெயந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.