கொல்கத்தா

மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி  பெற்றது.  இதில் மேற்கு வங்கத்தில் மட்டும் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.   இதனால் மேற்கு வங்க முதல்வரும் திருணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.   அவர் சமீபத்தில் ஒரு வங்க மொழி செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் அவர், “நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது மின்னணு வாக்கு இயந்திர மோசடியால் மட்டுமே ஆகும்.   இது போல பாஜக தொடர்ந்து மோசடிகள் செய்து வருகின்றது.   இதை வெளிக் கொணர ஒரு குழு ஒன்றை அமைக்க இருக்கிறேன்.  இது குறித்து காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கனவே  விவாதித்து இருக்கிறோம்.

தேவைப்பட்டால் இந்த முறைகேடுகள் குறித்து  எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.

குறிப்பாக பாஜக தலைவர்களால் தாங்கள் வெற்றி பெற உள்ள தொகுதிகளை எவ்வாறு சரியாக சொல்ல முடிந்தது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.  அதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது

இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் ஏற்கனவே புரோக்ராம் செய்யபட்டவைகள் ஆகும்.   அந்த புரோக்ராம் மூலம் ஒவ்வொரு கட்சிக்கும் வாக்குகள் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன.  இதனால் தான் பாஜகவினர் நாட்டில் 303 இடங்களும், மேற்கு வங்கத்தில் 23 இடங்களும் வெற்றி பெறுவோம் என சரியாக கூறி உள்ளனர்.

இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக ஏராளமான பணம் வாக்காளருகளுக்காக செலவழித்துள்ளது.  இது குறித்து எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.   ஆனால் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போல் பலனற்று போனது.    பணபலம் மற்றும் அதிகாரபலத்தை பயன்படுத்திய பாஜக மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் ஒரு தலை பட்சமாக நடந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.