மும்பை:

ஐடி நிறுவனங்கள்,கால் சென்டரில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க மகாராஷ்டிர அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இது தொடர்பாக மகாராஷ்டிரா தொழிலாளர் ஆணையர் ராஜீவ் யாதவ் தலைமையில் விசாரணை குழு ஒன்று மராட்டிய மாநில அரசு நியமித்துள்ளது.

இந்த குழு, மாதம் ஒருமுறை கூடி, ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அளிக்கும் புகாரை விசாரிக்கும்.

இந்த விசாரணைக் குழு முதல் முறையாக கடந்த ஜூன் 11-ம் தேதி கூடியது. அப்போது ஐடி மற்றும் கால் சென்டர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவது மற்றும் ஊதிய பிரச்சினை குறித்து புகார்கள் வந்தன.

பணியை விட்டு செல்லும் தொழிலாளர்களிடம் ஐடி நிறுவனங்கள் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கேட்பது, தொழிலாளர்களின் ஊதியத்தின் சிறு பகுதியை டெபாசிட் என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் முடியும் வரை வைத்திருப்பதாகவும் புகார்கள் வந்தன.

இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில் ஐடி நிறுவனங்கள் பெரும்பங்காற்றுகின்றன. மேலும் பணியில் சேரும்போது இளைஞர்களில் பலர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி வேலை பார்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேர்வு செய்கின்றனர்.

அனைத்துப் புகார்களையும் கவனத்தில் கொண்டு விசாரிப்போம் என்று இந்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் தேவங் தாவே தெரிவித்துள்ளார்.

சில ஐடி நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவின் போது பெற்றுக்கொள்ளும் ஆவணங்களை பல ஆண்டுகள் வைத்துக் கொள்கிறார்கள்.

முறையற்ற ஒப்பந்தங்களை போடுவதை நிறுத்துமாறும், அசல் சான்றிதழ்ளை 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களிடம் தருமாறும் ஐடி நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் தாவே தெரிவித்தார்.