பள்ளிமோன், கேரளா
தன்னை பெற்ற தாய்க்கு ஒரு மகன் தாயின் பள்ளித் தோழரை திருமணம் செய்து வைத்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.
கேரளாவில் உள்ள பள்ளிமோன் பகுதியை சேர்ந்த இளம் பொறியாளர் கோகுல் ஸ்ரீதர் 23 வயதானவர் ஆவார். இவர் 10 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டு இருக்கும் போது இவருடைய தாய் கணவரின் கொடுமை தாங்காமல் மகனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். தான் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியை வேலையை ராஜினாமா செய்து விட்டு புதிய இடத்தில் பணியை தொடங்கினார்.
இது குறித்து கோகுல் ஸ்ரீதர் தனது முகநூல் பக்கத்தில் மலையாளத்தில், “என் தாய் தனது திருமணத்தின் மூலம் மிகவும் துன்பத்தை அனுபவித்துள்ளர். ஒரு முறை நெற்றியில் இரத்தம் சொட்ட அவரை பார்த்த போது நான் மிகவும் துயருற்றேன். அவர் எனக்காக அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொள்வதாக தெரிவித்தார்.
அன்று நான் அளித்த தைரியத்தால் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். எனக்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்து பொறியாளர் ஆக்கினார். ஆனால் நான் பணி நிமித்தமாக வெளியூர் சென்று விட்டால் எனது தாய் தனிமையில் வாடுவார் என்பதால் நான் அவரை மறுமணம் செய்துக் கொள்ளுமாறு கூறினேன்.
எனது தாயார் அதை மறுத்து விட்டார். ஆனால் அவருடன் பணிபுரிபவர் மூலம் அவரை திருமணம் செய்துக் கொள்ள விரும்பி ஒருவர் முன் வந்தார். அந்த நபர் அவருடைய பள்ளித் தோழர் ஆவார். அதன் பிறகு தற்போது அவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இனியாவது எனது தாய் மகிழ்வுடன் வாழ வாழ்த்துங்கள்” என பதிந்துள்ளார்.
கோகுல் ஸ்ரீதர் பதிவுக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி இந்த பதிவை பலரும் பகிர்ந்து வாழ்த்து தெர்விக்குமாறு கோரி உள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகி உள்ளது.