பகவன்புரா, பஞ்சாப்
ஆழ்துளை குழாய் கிணற்றில் விழுந்த குழந்தை இறந்தததால் பஞ்சாப் முதல்வர் அனைத்து திறந்த வெளி குழாய் கிணறுகளையும் மூட உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் பகவன்புரா என்னும் சிற்றூர் உள்ளது. இந்த சிற்றூரை சேர்ந்த ஃபதல்வீர் என்னும் 2 வயது ஆண் குழந்தை வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஆழ்துளை குழாய் கிணற்றினுள் விழுந்து விட்டது. இதை கண்ட குழந்தையின் தாய் அதைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் அது முடியவில்லை.
சுமார் 150 அடி ஆழமுள்ள இந்த குழாய் கிணற்றில் குழந்தை 125 அடியில் சிக்கி இருந்தது. அந்த குழந்தையை மீட்க காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட பலரும் முயன்றனர். கிணற்றுக்குள் குழந்தை மூச்சு விட வசதியாக ஆக்சிஜன் செலுத்தபட்டது. அதன் பிறகு பக்கவாட்டில் மற்றொரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டு 110 மணி நேர முயற்சிக்கு பிறகு சிறுவன் ஃபதல்வீர் மீட்கப்பட்டான்.
மயங்கி இருந்த குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் குழந்தை இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை ஒட்டி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மாநிலத்தில் உள்ள அனைத்து திறந்த வெளி குழாய் கிணறுகளையும் மூட உத்தரவிட்டுள்ளார்.