கொடுங்கலூர்

கேரள மாநிலம் கொடுங்கலூர் நகராட்சியில் புது கட்டுமானம் அமைக்க அனுமதி பெற மரங்கள் நடவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சிறு நகரமான கொடுங்கலூர் நகராட்சியில் சுமார் 1140 வீடுகள் மட்டுமே பொருளாதாரத்தில் பின் தங்கியோர் வசிக்கும் வீடுகள் ஆகும். மற்றவை எல்லாம் சுமார் 1500 சதுர அடிக்கு குறையாத பரப்புள்ள இல்லங்கள் ஆகும். இந்த நகராட்சியின் பல பகுதிகளில் புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.

அதனால் இயற்கை சூழல் பாதிப்படையலாம் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை சரி செய்ய கொடுங்கலூர் நகராட்சி ஒரு புதிய சட்டம் இயற்ற உள்ளது. அதன்படி 1500 சதுர அடி அல்லது அதற்கு மேல் கட்டுமானம் கட்டுபவர்கள் குறைந்தது இரு மரங்களாவது அந்த இடத்தில் வளர்க்க வேண்டும். ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இரு மரங்கள் வளர்த்தால் மட்டுமே கதவு எண்கள் வழங்கப்படும்.

இனி புதியதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மரம் நட்ட பிறகே அனுமதி வழங்கப்படும் என அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள்து.   இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அந்நகராட்சியில் தலைவர் ஜெயித்ரன் மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர், “கேரள நகராட்சி கட்டிட விதிகளின் படி உள்ளாட்சி மட்டுமே கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க முடியும். அதன் அடிப்படையில் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து யாரும் நீதிமன்ற வழக்கு தொடங்காமல் இருக்க  மாநிலஅரசின் அனுமதியை கோரி உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.