ராய்ப்பூர்:

த்திஷ்கர் மாநிலத்துக்கு மாம்பழம் ஏற்றி வந்த டிரக்கினுள் ரூ.70 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்தி வரப்பட்டிருந்தது, குரங்குகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை அன்று ஆந்திர மாநில பதிவெண்ணை கொண்ட டிரக் ஒன்றில் மாம்பழம் ஏற்றப்பட்டு சத்திஷ்கர் மாநிலத்துக்கு சென்றது. சத்திஷ்கர் மாநிலத்தின் ஹெல்காபானி என்ற வனப்பகுதியில்  டிரக் இரவு வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரக் பழுதானது.

இந்த நிலையில் மாம்பழத்தினை கண்ட ஏராளமான குரங்குகள் டிரக்கினுள் புகுந்து விளையாடின. அதை தடுக்க முயன்ற டிரக் டிரைவரை கடிக்க வந்ததால், அவரும் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதுகுறித்து பொதுமக்கள் சிர்மிரி டவுன் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து குரங்குகளை விரட்டிவிட்டு, டிரக்கை சோதனை செய்தனர். அப்போது, மாம்பழம்  ஏற்றி வந்த டிரக்கினுள் சுமார் 800 கிலோ கஞ்சா போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் என்று கூறப்படுகிறது.

குரங்குகளின் மாம்பழ வேட்டையின் காரணமாக, டிரக்கினுள் மறைத்து கொண்டு வரப்பட்ட கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.