புனே: பிறந்து 20 ஆண்டுகள்ஆகியுள்ள நிலையில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகவும் கடுமையான சோதனை காலகட்டத்தில் சிக்கியுள்ளது. அந்த கட்சி இனிவரும் காலங்களில் உயிர்ப்புடன் இருக்குமா? என்ற சிக்கலான கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு காங்கிரசிலிருந்து உடைந்து தனிக்கட்சியாக பரிணமிக்கத் தொடங்கியதிலிருந்து, தொடர்ந்து 15 ஆண்டுகள் மாநில அரசின் அதிகாரத்தில் இருந்து வந்தது அக்கட்சி. மேலும், பத்தாண்டுகள் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் அங்கம் வகித்தது. ஆனால், கடந்த 2014ம் ஆண்டிலிருந்துதான் அக்கட்சிக்கு சரிவு தொடங்கியது எனலாம்.
அப்போதிருந்து இப்போதுவரை அக்கட்சி எதிர்க்கட்சியாகவே இருந்து வருகிறது. அக்கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இந்த எதிர்க்கட்சி வரிசை என்பது பழக்கமில்லா ஒன்றாகும்.
மராட்டிய மாநிலத்தின் மேற்குப் பகுதிகள் மற்றும் மராத்வாடா பகுதிகளில் அக்கட்சிக்கு செல்வாக்கு மிக அதிகம். மேலும், அம்மாநில கூட்டுறவு அமைப்புகளிலும் அக்கட்சி கோலோச்சி வந்தது. ஆனால், சமீபகாலங்களில் அக்கட்சிக்கு ஆதரவளித்த மராத்தா மற்றும் இதர சமூகங்களை சேர்ந்த மக்கள், தங்களின் ஆதவை பாரதீய ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணிக்கு மடைமாற்றிவிட்டனர்.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில்தான், சரத்பவாரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தோல்வியை தழுவியதும் நடந்தது. எனவே, கட்சியின் அடிப்படைகள் எல்லாம் கரைந்துபோக தொடங்கியுள்ள நிலையில், அந்தக் கட்சியின் எதிர்காலம் என்னவாகும்? என்ற வலுவான கேள்வி தொக்கி நிற்கிறது.