டெஹ்ராடூன்: முதன்முதலாக இந்தியாவில் கிராமப்புற மருத்துவ சேவையில், வெற்றிகரமான முறையில் டிரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உத்ரகாண்ட் மாநிலத்தில், தேஹ்ரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு உள்ளார்ந்த கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ரத்த மாதிரிகளை சுமந்துகெண்டு, 36 கிலோ மீட்டர் பறந்து, மாவட்ட மருத்துவமனையை சிறிதுநேரத்திலேயே சென்றடைந்தது ஆளில்லாத டிரோன்.
ஆனால், இதையே சாலை வழியாக எடுத்துவர முயற்சி செய்யப்பட்டிருந்தால் மிக அதிகநேரம் பிடித்திருப்பதோடு, மிகுந்த சிரமமும் ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் முறையான சாலை வசதியில்லாமல் பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. எனவே, அதுபோன்ற சூழலில் இந்த டிரோன்கள் மிகவும் பயனுடையவையாக திகழும் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த டிரோன் திட்டம் பரவலாக்கப்பட்டால், இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் பயனடையவார்கள் என்றும் நம்பப்படுகிறது. இந்த டிரோன் முன்முயற்சியானது டெலி-மெடிசின் திட்டத்தின் ஒரு பகுதிதான் என்றும் கூறப்படுகிறது.
36 கி.மீ. தூரத்தைக் கடப்பதற்கு இந்த டிரோன் எடுத்துக்கொண்ட நேரம் 18 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், இதே தூரத்தை சாலை வழியாக கடக்க 70 முதல் 100 நிமிடங்கள் வரை ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.