வயநாடு:
வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அங்குள்ள மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக 3 நாள் சுற்றுப்பயணமாக வயநாட்டில் முகாமிட்டு உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
கேரளாவில் நேற்று தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வயநாடு தொகுதியில் கொட்டும் போன்ற பேனர்களுடன் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, சுமார் 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் நன்றி தெரிவிப்பதற்காக 3 நாள் பயணமாக அவர் கேரளா சென்றுள்ளார்.
முதல் நாளான நேற்று முன்தினம் கோழிக்கோடு, மலப்புரம், நிலம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15 இடங்களில் பொதுமக்களை சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார். அதையடுத்து நேற்று 2- வது நாளான இன்று வயநாடு மாவட்டத்தின் கல்பெட்டா சென்றார். அவருக்கு சாலையின் இருபுறமும் திரண்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
‘We Are With You’ (நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்) ‘Nation needs You’ (தேசத்துக்கு நீங்கள் தேவை) போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ராகுலை வரவேற்றனர். வயநாடு முழுவதுமே ராகுலை வரவேற்று, பிரமாண்ட பேனர், கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, வயநாடு தொகுதியில் பல இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால், கொட்டும் மழையிலும் சுமார் இரண்டு மணி நேரம் வரை நனைந்தபடி மக்கள் ராகுலை சந்தித்தனர்.
பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி, “வயநாடு தொகுதி மக்களுக்காக என்னுடைய கதவு எப்போதும் திறந்திருக்கும். ஒரு எம்.பி-யாக உங்கள் பிரச்னையை முழுமையாக அணுகி, அதற்கான தீர்வை கொடுக்க முயற்சி செய்வேன். வயநாடு மட்டுமல்ல, கேரள மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். எளிய மக்களைப் பாதுகாக்கும், எதிர்க்கட்சியாக செயல்படப் போகிறோம்.
பிரதமர் மோடி பொய்களை கூறி தேர்தலில் வெற்றி பெறுவதாகவும், நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியில் அவர் ஈடுபடுவதாகவும் மோடியின் திட்டங்களால், பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாக்கும் வகையில் எங்கள் குரல் ஒலிக்கும். நரேந்திர மோடி அரசு, நாடு முழுவதும் வெறுப்பு அரசியலைப் பரப்பி வருகிறது. அதை எதிர்ப்பதற்கு அன்பு மட்டுமே ஒரே வழி என்பதை காங்கிரஸ் அறியும்”.
இவ்வாறு ராகுல் கூறினார்.