புதுடெல்லி: இந்தியாவின் மிக உயரமான குப்பை மலை என்று கூறப்படும் டெல்லியின் காஸிபூர் குப்பைக் கிடங்கு, ஓராண்டில் தாஜ்மஹாலின் உயரத்தை தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்தக் குப்பைக் கிடங்கு கடந்த 1984ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தக் கிடங்கிற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 2000 டன் குப்பைகள் வந்து சேர்கின்றன. தற்போது 65 மீட்டரை எட்டியுள்ள அந்த குப்பை மலை, அடுத்த 2020ம் ஆண்டில் தாஜ்மஹாலின் உயரமான 73 மீட்டரை எட்டிவிடும்.
இந்தக் குப்பை கிடங்கு 40 கால்பந்து மைதானங்களின் அளவுள்ளது. ஆண்டிற்கு சுமார் 10 மீட்டர் அளவிற்கு உயர்ந்து வருகிறது அந்த குப்பை மலை. அதிலிருந்து வெளிவரும் புகையும், அதைச்சற்றி வட்டமிடும் பறவைகள் மற்றும் அந்தக் குப்பையில் மேயும் பசுக்கள் போன்றவை அந்த சூழலின் கொடுமையை உணர்த்துவதாய் உள்ளன.
உலகின் மிகவும் மாசடைந்த தலைநகரங்களில் டெல்லி முதலிடம் வகிக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“இந்த காஸிபூர் குப்பைக் கிடங்கை இப்படியே விட்டால், அதன் உயரம் வானளாவ அதிகரித்து, அதன்மேலே பறக்கும் விமானங்களை எச்சரிக்கும் நிலையேற்படும்” என உச்சநீதிமன்றம் அதைப்பற்றி ரசிக்கும்படியான அதேசமயம் எச்சரிகை செய்யும் விதத்தல் கருத்து கூறியிருந்தது.
கடந்த 2002ம் ஆண்டே இந்தக் குப்பைக் கிடங்கு அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்ட நிலையில், அப்போதே மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அக்கிடங்கிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் குப்பைகள் வந்தவண்ணம் உள்ளன. அதிகாரிகளுக்கு வேறு மாற்றை கண்டறியும் வழி தெரியவில்லை.
கடந்த 2018ம் ஆண்டு மழையின் காரணமாக ஏற்பட்ட குப்பைச் சரிவில் இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.