மக்களவைத் தேர்தல்களில் தமிழக அளவில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வெற்றி – தோல்விகள் மற்றும் அதிகாரப் பங்கெடுப்புகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும், சில விஷயங்களில் ஆச்சர்யமான ஒற்றுமைகளும் உண்டு.

மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை, சட்டமன்ற தேர்தல்கள்தான் பிரதானமானவை என்றாலும்கூட, தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவே இருமுனைப் போட்டி நிலவும் களம் என்பதால், மக்களவைத் தேர்தல் மற்றும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகளில், திமுக – அதிமுக ஆகிய கட்சிகளின் செயல்பாடுகள் தொடர்பான ஒப்பீட்டை மேற்கொள்வதும் சுவாரஸ்யமான ஒன்றாகவே இருக்கும்.

திமுகவைப் பொறுத்தவரை, இந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற 23 இடங்கள் என்பவை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இடங்கள், மக்களவையின் மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தில் திமுகவை வைப்பதால் மட்டுமல்ல, 20க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் என்ற இந்த எண்ணிக்கையை அக்கட்சி கடைசியாகப் பெற்றது 48 ஆண்டுகளுக்கு முன்னால்.

அதன்பிறகு 1996ம் ஆண்டு அதற்கான நல்ல வாய்ப்பு இருந்தாலும், அதை நழுவவிட்டது திமுக. 1957 முதல் மொத்தம் 16 நாடாளுமன்ற தேர்தல்களை திமுக சந்தித்திருந்தாலும், 1967, 1971 மற்றும் 2019 ஆகிய 3 தேர்தல்களில் மட்டுமே, அக்கட்சி 20க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றுள்ளது.

அவற்றில், 1967ம் ஆண்டு கிடைத்த 25 இடங்கள், தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற திமுகவிற்கு பெரியளவில் உதவியது. பழைய காங்கிரசிலிருந்து விடுதலைப் பெற்று சிறகடித்துப் பறக்க துடித்த இந்திரா காந்திக்கு, காமராஜரின் செல்வாக்கை குறைக்கும் நோக்கில், தனது 25 உறுப்பினர்களின் ஆதரவை பல விஷயங்களில் அளித்துவந்தார் அன்றைய திமுக தலைவர் கருணாநிதி.

பின்னர் 1971ம் ஆண்டு திமுக பெற்ற 23 இடங்களால் பெரியளவில் பலன் இல்லை என்றே கூறலாம். ஏனெனில், இந்திர காந்தி அந்த சமயத்தில் அசுரபலம் பெற்று திகழ்ந்தார்.

அதாவது, கருணாநிதி திமுக தலைவராக சந்தித்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற 23 இடங்களால் அக்கட்சிக்கு தனிப்பட்ட முறையில் எப்படி அதிகாரப் பங்கீடு கிடைக்கவில்லையோ, அதேபோன்று, ஸ்டாலின் திமுக தலைவராக சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்துள்ள 23 இடங்களாலும், திமுகவிற்கு தனிப்பட்ட முறையில் அதிகாரப் பங்கீடு கிடைக்கவில்லை. அப்போது இந்திரா காந்தி என்றால், இப்போது நரேந்திர மோடி..!

1977ம் ஆண்டிலிருந்து தமிழக அரசியல் திமுக – அதிமுக என்ற இரு கட்சிகளுக்கான களமாக மாறுகிறது. 1977 முதல் அதிமுக பங்குபெற்ற 12 மக்களவைத் தேர்தல்களில் அக்கட்சி மொத்தமாக பெற்ற மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 128. அதே காலகட்டத்தில் திமுக பெற்ற எண்ணிக்கையோ 122.

ஆனால், இதில் எந்தக் கட்சி அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையால் அதிக பலனடைந்தது என்று பார்த்தோமானால், திமுகதான் முன்னிலையில் இருக்கிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை, திமுகவிற்கு முன்பாகவே மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பை பெற்ற கட்சிதான். கடந்த 1979ம் ஆண்டு சரண்சிங் அமைச்சரவையில் அதிமுகவின் சத்தியவாணி முத்து மற்றும் அரவிந்த பால பழனூர் ஆகியோர் முதன்முதலாக இடம்பெற்றனர். தமிழ்நாட்டிலிருந்து காங்கிரஸ் அல்லாதவர்கள், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது அதுதான் முதன்முறை. அந்த வாய்ப்பு அதிமுகவிற்கே கிடைத்தது. ஆனால், திமுக அந்த வாய்ப்புக்காக இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

இடையில், 1980ம் ஆண்டு இந்திராவுடன் கூட்டணி வைத்து மக்களவைத் தேர்தலில் வென்ற பின்னர், திமுகவின் ஜி.லட்சுமணனுக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. அதுதான் டெல்லியில் திமுக முதன்முதலில் பெற்ற குறிப்பிடத்தக்க பதவி.

ஆனால், இதற்கு போட்டியாக, 1984 மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக, தனது கட்சியின் தம்பிதுரைக்கு அதே பதவியை போட்டிக்காக கேட்டுப்பெற்றது.

இதன்பிறகுதான் திமுகவின் டெல்லி காலகட்டம் தொடங்கியது. இடையில் சில இடைவெளிகள் இருந்தாலும், அதிமுகவுடன் ஒப்பிடுகையில் மிக அதிக காலம் டெல்லி அதிகாரத்தை சுவைத்த கட்சி திமுகவே.

1989ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், ஒரு இடத்தில்கூட திமுக வெல்லவில்லை என்றாலும், அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் முரசொலி மாறனுக்கு அரசியல் கூட்டணியின் அடிப்படையில், வி.பி.சிங் அரசில் கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. வி.பி.சிங் அரசு ஓராண்டு மட்டுமே நீடித்தது.

அடுத்து, 1996 முதல் 1998 வரை 1.5 ஆண்டுகள் தேவகெளடா மற்றும் குஜ்ரால் அரசுகளில் அமைச்சர் பதவிகளை அனுபவித்த திமுகவிற்கு, இடையில் ஒரு 13 மாதங்கள் இடைவெளி விழுந்தது. அது மட்டுமே ஜெயலலிதாவிற்கான காலகட்டமாக அமைந்தது. பின்னர் மீண்டும் 1999 தொடங்கி 2013 ஜுன் வரை (இடையில் சில மாதங்கள் மட்டுமே இடைவெளி) கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவைகளில் பங்கேற்று, அதிகாரத்தை ருசித்தது திமுக.

மத்தியில் அமைந்த கூட்டணி யுகங்கள், திமுகவிற்கான யுகமாக அமைந்தது. இதுவரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் மத்திய அதிகார சுகத்தை அனுபவித்துள்ளது திமுக. இந்த விஷயத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே அதிர்ஷ்டமற்றவர்கள் எனலாம். வெறும் 6 மாதங்கள் மட்டுமே நீடித்த சரண்சிங் அமைச்சரவையில் அதிகாரத்தை பெற்றதோடு சரி. மற்றபடி, தம்பிதுரைக்கான துணை சபாநாயகர் பதவியில் மட்டுமே எம்ஜிஆர் திருப்தியடைய முடிந்தது.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, 1991 முதல் 1996 வரை பெரும்பான்மையற்ற நரசிம்மராவின் ஆட்சிக்கு தனது 11 மக்களவை உறுப்பினர்களை வைத்து ஆதரவளித்தபோதும், நரசிம்மராவ் தனித்தே ஆட்சி நடத்தினார். பின்னர், 13 மாதகால வாஜ்பாய் அமைச்சரவையில் அதிகாரப் பங்கீடு கிடைத்தபோதும், அது அமைதியானதாக இருக்கவில்லை.

2004ம் ஆண்டு வெறும் 16 மக்களவை உறுப்பினர்களை வைத்திருந்த கருணாநிதிக்கு கிடைத்த முக்கியத்துவத்தில் பாதியளவு கூட, 2014ம் ஆண்டு 37 மக்களவை உறுப்பினர்களை வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு கிடைக்காத வண்ணம் சூழல் மாறிப்போனது.

மத்திய அதிகார விஷயத்தில் இப்படியிருந்தாலும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவருமே சட்டமன்ற தேர்தல் விஷயத்தில் கருணாநிதியைவிட கொடுத்து வைத்தவர்களாக இருந்தனர். மொத்தம் 15 ஆண்டுகள் மட்டுமே அதிமுக தலைவராக இருந்த எம்ஜிஆர் 10 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். 27 ஆண்டுகள் அதிமுக தலைவராக இருந்த ஜெயலலிதா 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். ஆனால், 49 ஆண்டுகள் வரை திமுக தலைவராக இருந்த கருணாநிதி, முதல்வராக இருந்த ஆண்டுகள் 19 மட்டுமே.

மக்களவைத் தேர்தல்களில் அதிமுக இரண்டுமுறை (1996 & 2004) 0 பெற்றதென்றால், திமுகவோ மூன்று முறை(1989, 1991 & 2014) 0 பெற்றது. மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை அதிமுக பெற்றதென்றால், திமுகவும் அதே அந்தஸ்தை அடுத்த தேர்தலிலேயே பெற்றுவிட்டது. இரண்டு கட்சிகளுமே, மக்களவை துணை சபாநாயகர் பதவியையும் அனுபவித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக ஒப்பிட்டுப் பார்த்தால், சட்டமன்ற தேர்தல்களைப் பொறுத்தவரை அதிமுக அதிர்ஷ்டக்கார கட்சியாகவும், நாடாளுமன்ற தேர்தல்களைப் பொறுத்தவரை திமுக அதிர்ஷ்டக்கார கட்சியாகவும் திகழ்ந்து வந்துள்ளதை அறிய முடிகிறது.

– மதுரை மாயாண்டி