சென்னை:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான புதிய பாடப்புத்தகங்களை தலைமை செயலகத்தில் இன்று சில மாணவர்களுக்கு வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 77.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த கல்வியாண்டில், 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடபுத்தகங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த பாடப்புத்தகங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி தொடங்கி வைத்பேசினார். அப்போது, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களது புத்தகச் சுமையினை குறைக்கும் நோக்கத்தோடு 2012-2013 கல்வியாண்டில் முப்பருவ கல்வி முறை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் பருவம் ஜுன் மாதத்திலும், இரண்டாம் பருவம் அக்டோபர் மாதத்திலும், மூன்றாம் பருவம் ஜனவரி மாதத்திலும் தொடங்குகிறது. பாடப் புத்தகங்கள் ஒவ்வொரு பருவத்தின் தொடக்க நாளன்றே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மாணவர்களின் முழுமையான ஆளுமைத் திறனை வளர்த்திடவும், செயல் வழிகற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சிந்தனைத் திறனை வெளிக்கொண ரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும், உலகளாவிய அறிவியல் தொழில் நுட்ப மாற்றங்களுக்கேற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை மாணவ, மாணவிகள் உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும், அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மிகச் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து, புதிய பாடத் திட்டமும், பாட நூல்களும் உருவாக்கப்பட்டது.
புதிய பாடத் திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள பாடங்களை படிக்க 220 நாட்கள் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு தான் இன்றே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக தீர்த்திடும் வகையில் உள்ளாட்சித் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், முழுமை யாக பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.
அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் இன்றே வழங்கப்படும். மத்திய அரசால் நடத்தப்படும் எந்த போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுகின்ற வகையில் இந்த புதிய பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கல்வித் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கை களையும், மாற்றங்களையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.