குவாலியர்
மரம் நடுவோருக்கு மட்டுமே துப்பாக்கி உரிமம் வழங்கப்படும் என குவாலியர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் – சம்பல் பகுதிகளில் கொள்ளைக் காரர்கள் அதிகம் உள்ளனர். இங்குள்ள பலருக்கு கொள்ளைக்காரர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் எனவே இங்குள்ள மக்களில் பலர் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளனர். அது மட்டுமின்றி மேலும் பலர் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
குவாலியர் மாவட்ட ஆட்சியர் அனுராக் சவுத்ரி, “இனி துப்பாக்கி உரிமம் கோருவோர் குறைந்தது பத்து மரக்கன்றுகள் நட வேண்டும். அவரிடம் சொந்தமாக நிலம் இல்லை எனில் அரசிடம் மரம் நடுவதற்காக நிலம் வேண்டி அந்த இடத்தில் மரக்கன்றுகள் நட வேண்டும். அதை செல்ஃபி எடுக்க வேண்டும்.
அத்துடன் அந்த மரங்கள் நட்டு ஒரு மாதத்துக்கு பிறகு அந்த மரங்களின் புகைப்படத்தை எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இந்த புகைப்படங்களை உள்ளூர் அரசு அதிகாரி அனுமதி அளித்த பிறகு துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
யாருக்கேனும் கொலை மிரட்டல் இருந்தால் அதை நிரூபித்தால் அவர்களுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் வழங்கப்படும். அந்த உரிமம் நிரந்தரமாக்க அவர்களும் மரக்கன்று நட்டு ஒரு மாதம் கழித்து புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், “இதைப் போலவே பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் கோருபவர்களுக்கும், கல் உடைக்கும் ஆலை நிறுவ விண்ணப்பம் செய்வோருக்கும் மரம் நடுவதை கட்டாயம் ஆக்க ஆலோசிக்க பட்டுள்ளது” என சவுத்ரி கூறி உள்ளார்.