புனே: வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என்பதாக எதிர்பார்க்கப்படும் மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரசை விட கூடுதல் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல்களில், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, மராட்டிய மாநிலத்தில் படுதோல்வி அடைந்தது. அதேசமயம், காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில், சரத்பவாரின் கட்சியோ 4 இடங்களில் வெற்றிபெற்றது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலிலும், காங்கிரசைவிட, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வென்றது. எனவே, மாநிலத்தில் தானே பெரிய கட்சி என்ற முறையில், சட்டமன்ற தேர்தலில் காங்கிரசைவிட அதிக இடங்களில் போட்டியிட அக்கட்சி முடிவு செய்திருப்பதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய, தேசியவாத காங்கிரசின் கூட்டம் ஜுன் 1ம் தேதி நடைபெற்றது. மேலும், கடந்த மே 30ம் தேதி டெல்லியில் பவாரின் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்துப் பேசினார். ஆனால், அதுகுறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.