சென்னை:

மிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடஒதுக்கீடு அடிப்படையில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ள நிலையில், தற்போதுதான் ‘ வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததாகவும், அடுத்த ஜூலை 2-வது வாரம் வாக்காளர் பட்டியல் வெயிடப்படும் எனவும் தகவல் வெளியானது.  இதை தொடர்ந்து, ஆகஸ்ட் இறுதியில  உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், உள்ளாட்சித் அமைப்புகளில் இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதில், பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பெண்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மக்கள்தொகை அடிப்படையில் வார்டுகள் பங்கீடு செய்யப்பட்டு உள்ளன.

மேலும், இடஒதுக்கீடானது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் தேர்வான உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு அடோபர் மாதம்  24-ந் தேதியுடன் முடி வடைந்தது.  அதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்ததையடுத்து உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகங்களை கவனிக்க சிறப்பு அதிகாரிகளை தமிழகஅரசு நியமனம் செய்தது.  இதுவரை சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலம் 5 முறை நீட்டிக்கப்பட்டிருந்தது.  பின்னர் தேர்தல் குறித்த பல கட்ட  விசா ரணைகளின் போது பல்வேறு காரணங்களை கூறி  உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் தாமதப்படுத்தி வந்தன.

தொகுதி மறுவரையறை  செய்ய வேண்டியதால் காலதாமதமாகிறது என்று தமிழக அரசு நீதி மன்றங்களில் கூறி  பல முறை அவகாசம் கேட்ட நிலையில், விரைவில் தேர்தலை நடத்த உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டன.

இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் பல பணிகள் முடங்கி உள்ளன. இந்த நிலையில் தேர்தல் எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழ்நிலையில்,  தறபோது அதற்கான பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன.

இதன் முன்னோட்டமாக சமீபத்தில், உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், தற்போது வார்டுகள் வரையறையப்பட்ட விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி பெண்களுக்கு இடஒதுகீடு முறையில் 50 சதவிகிதம் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னையில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதுபோல, திருச்சி மாநகராட்சியில் பெண்களுக்கு 33 வார்டுகள், சேலம் மாநகராட்சியில் பெண்களுக்கு 30 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வார்டுகள் புதியதாக வரையறை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.