புதுடெல்லி: தேவையான இடங்களில் வெற்றியடையாத காரணத்தால், நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரப்போவதில்லை என தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

ஒரு சட்ட அவையின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற வேண்டுமெனில், அவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 10% உறுப்பினர்களைப் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், இந்திய மக்களவையில் குறைந்தபட்சம் 55 உறுப்பினர் உடைய கட்சிக்கே அந்த அந்தஸ்து செல்லும்.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 52 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஆளும் பாரதீய ஜனதாவே இந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

அதேசமயம், இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாகவும் தகவல்கள் வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய கூட்டணியின் அடிப்படையில் பெரும்பான்மை பெற்றால் ஆட்சியமைக்க முடியும் எனும்போது, அதே கூட்டணி எண்ணிக்கையின் அடிப்படையில் எதற்காக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கோரக்கூடாது? என்ற குரல்களும் அக்கட்சிக்குள் எழுந்துள்ளன.

திமுக மற்றும் வேறுசில கட்சிகளோடு சேர்த்து, காங்கிரஸ் கூட்டணிக்கு 92 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எண்ணிக்கை அடிப்படையில் பாரதீய ஜனதாவுக்கு அடுத்த பெரிய கட்சியாக திகழ்கிறது காங்கிரஸ்.