பெங்களூரு:
வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் குறித்த சந்தேகங்களை தேர்தல் ஆணையம் தீர்த்து வைக்க வேண்டும் என முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஓய் குரோஷி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களிலும், வாக்களித்ததை சரிபார்க்கும் விவிபாட் இயந்திரத்திலும் முறைகேடு செய்துள்ளதாக எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது.
இந்த குற்றச்சாட்டு குறித்து முன்னாள் தலைமை தேர்தல் குரோஷி கூறும்போது, “வாக்குப் பதிவு இயந்திரங்களிலோ, விபாட் இயந்திரங்களிலோ முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு இல்லை.
மாறுபட்ட எண்ணிக்கையை இயந்திரம் காட்டாது. எத்தனை முறை பட்டனை அழுத்தினாலும், பதிவான வாக்குகளைத்தான் காட்டும்.
இந்த குற்றச்சாட்டுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறை பாதுகாப்பானது என்பதை எதிர்கட்சிகளுக்கும், மக்களுக்கும் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.
மக்கள் நம்பிக்கை வெல்ல வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது. பல்வேறு கட்ட பரிசோனைகளுக்குப் பிறகுதான் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை.
விவிபாட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த குற்றச்சாட்டு ஏற்கக் கூடியதாக இல்லை.
வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்று கோருவதைவிட, வாக்குப் பதிவு இயந்திரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரலாம்.
வாக்குச் சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கெனவே நாம் வாக்குப்பதிவு இயந்திரத்தை மேம்படுத்தியிருக்கின்றோம்” என்றார்.