மிராரோட், மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் மிராரோட் பகுதியில் உள்ள பாஜக சட்டப்பேரவை உறுப்பினரின் பள்ளியில் ஆயுத பயிற்சி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மிராரோட் பகுதியில் செவன் லெவன் அகாடமி என்னும் பள்ளி ஒன்று உள்ளது. இது பாஜக சட்டபேரவை உறுப்பினர் நரேந்திர மேத்தாவுக்கு சொந்தமான பள்ளியாகும். இந்த பள்ளியில் பஜ்ரங் தள் சார்பில் ஒரு சிறுவர் பயிற்சி முகாம் மே மாதம் 25 முதல் ஜூன் 1 வரை நடந்துள்ளது. இந்த முகாம் குறித்த புகைப்படங்களை முகநூலில் பிரகாஷ் மேத்தா என்பவர் வெளியிட்டார்.
இந்த முகாம் குறித்து தன்னார்வு நிறுவனமான இந்திய குடியரசு இளைஞர்கள் அணி என்னும் அமைப்பு புகார் அளித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சஞ்சய் பாண்டே. “இந்த முகாமில் சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக புகைப்படங்களில் இருந்து தெரிய வருகிறது. வயதுக்கு வராத சிறுவர்கள் இவ்வாறு ஆயுத பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவது வன்முறையை வளர்க்கும். எனவே இது குறித்து பஜ்ரங்தள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த புகார் மீது காவல்துறை ஏவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை ஒட்டி சஞ்சய் பாண்டே, ”எங்கள் புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் காவல்துறை துணை உயர் அதிகாரியான அதுல் குல்கர்ணியிடம் முறையீடு செய்தோம். அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
அதிகாரி அதுல் குல்கர்னி, “இது குறித்த விசாரணையை நாங்கள் தொடங்கி உள்ளோம். இந்த முகாமை நடத்தியவர்கள் தங்களிடம் துப்பாக்கி வைத்திருக்க உரிமமும் இந்த பயிற்சிகான அனுமதியும் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த ஆவணங்களை சரி பார்க்க அளிக்குமாறு கேட்டுள்ளோம். அவைகளில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என கூறி உள்ளார்.