புனே: கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதத்தில் 24 வயது நிரம்பிய மோஹ்சின் ஷெய்க், புனேவில், இந்து ராஷ்ட்ர சேனா அமைப்பினரால் ஒரு கலவரத்தில் அடித்துக் கொல்லப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்தும், அவரின் குடும்பத்தினருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
அவரின் கொலையில் தொடர்புடையவர்கள், தற்போது பெயிலில் வெளிவந்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டுள்ளனர். ஆனால், கொலை விஷயத்தில் நியாயம் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்திருந்தனர்.
கொல்லப்பட்ட மோஹ்சினின் இளைய சகோதரர் முபின் மற்றும் அவரின் நண்பர்கள், சோலாப்பூர் நகரில் இதுதொடர்பாக அமைதி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். ஏனெனில், அதுதான் அவர்களின் சொந்த ஊர்.
மேலும், அதுதொடர்பான பேனர்களும் தயாராகிவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதியை, இரண்டாண்டுகளாக இந்த அரசு நியமிக்கவேயில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
ஒரு தபால்காரரின் பேரனான மோஹ்சின், விப்ரோ நிறுவனத்தில் நேர்காணலில் கலந்து கொண்டிருந்தார். சிவாஜி மற்றும் பால்தாக்கரே படங்களை, சமூகவலைதளங்களில் தவறாக சித்தரித்த காரணத்தினால், இந்து ராஷ்ட்ர சேனா அமைப்பு புனே நகரில் வன்முறையில் ஈடுபட்டது. அப்போது, நமாஸ் முடித்துவிட்டு அந்த வழியே வந்த மோஹ்சின், அக்கும்பலிடம் சிக்கி கொலையுண்டார்.