அமராவதி

ஆந்திர மாநிலத்தில் படிப்படியாக மது விலக்கு அமுல்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார்.

நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவி ஏற்றார். தேர்தலின் போது ஆந்திராவில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.

அதை தனது பதவி ஏற்பின் போது ஜெகன் மோகன் ரெட்டி உறுதிப் படுத்தினார். அதை ஒட்டி நேற்று அரசு அதிகாரிகளுடன் ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தி உள்ளார். அந்த ஆலோசனையில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டுள்ள்து. அதற்கான திட்டங்கள் குறித்து நேற்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் அந்த சாலைகளுக்கு அருகிலும் உள்ள மதுக்கடைகளை அரசு மூட உள்ளது. அதன் பிறகு சிறிது சிறிதாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை ஆந்திர அரசு குறைக்க உள்ளது. இறுதியாக நடசத்திர விடுதிகளில் மட்டுமே மதுவை அனுமதிக்கலாம் என முடிவு எடுக்கபட்டுள்ளது.

தற்போதுள்ள ஆந்திர அரசில் இதுவரை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மட்டுமே முதல்வராக பதவி ஏற்றுள்ளார். மற்ற அமைச்சர்கள் யாரும் இதுவரை பதவி ஏற்கவில்லை. எனவே வரும் 8 ஆம் தேதி காலை அமராவதி நகரில் அமைந்துள்ள ஆந்திர தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர்.